கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தஞ்சை பகுதிகளில் பலத்த மழை


கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தஞ்சை பகுதிகளில் பலத்த மழை
x
தினத்தந்தி 17 May 2021 1:04 AM IST (Updated: 17 May 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் தஞ்சை பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது

தஞ்சாவூர்,:_
அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் தஞ்சை பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது

கோடை காலம்

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் கோடை வெயிலில் உச்சகட்டமான கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. அவ்வப்போது மழை பெய்வதற்கான அறிகுறிகள் தோன்றினாலும் மழை பெய்யவில்லை. காற்று மட்டும் வீசி வந்தது.
பகலில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றால் இரவிலும் மின்விசிறியில் இருந்து வரும் காற்று அனல் காற்று வீசியது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. 

பலத்த மழை

இந்த நிலையில் தஞ்சையில் நேற்று மதியத்திற்கு பிறகு வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இரவு 7 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி செய்துள்ளனர். மேலும் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாஞ்சிக்கோட்டை

நாஞ்சிக்கோட்டை பகுதியை சுற்றியுள்ள விளார், சூரியன்பட்டி, மருங்குளம், நடுவூர், குருங்குளம், துலுக்கம்பட்டி, மாதாக்கோட்டை, கருக்காக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களிலும் நேற்று இரவு இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. தற்போது பெய்கின்ற மழை கோடை சாகுபடிக்கு உகந்தது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மழை காரணமாக நாஞ்சிக்கோட்டை பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

வல்லம்

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று இரவு 7 மணி அளவில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலிருந்து வெயில் கடுமையாக இருந்தது. வெயிலில் இருந்து விடுபட கோடை மழை பெய்யாதா? என்று மக்கள் ஏங்கித் தவித்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மேகம் திரண்டு வந்து இடி மின்னலுடன் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.

Next Story