500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தோப்பூரில் ஒரு வாரத்தில் அமைக்கப்படும்-அமைச்சர் மூர்த்தி பேட்டி


500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தோப்பூரில் ஒரு வாரத்தில் அமைக்கப்படும்-அமைச்சர் மூர்த்தி பேட்டி
x
தினத்தந்தி 17 May 2021 1:08 AM IST (Updated: 17 May 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஒரு வாரத்தில் அமைக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்

மதுரை, மே.17-
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஒரு வாரத்தில் அமைக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
தீவிர நடவடிக்கை 
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தீவிர நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மதுரையில் வணிக வரி மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். முதல்கட்டமாக அவர் கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன், அரசு ஆஸ்பத்திரி டீன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ச்சியாக ஆக்சிஜன் தட்டுபாட்டினை போக்குவதற்காக பிற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை மதுரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தினார். அதன்பின் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டளை அறையை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
அதேபோல் யாதவ கல்லூரியில் 120 படுக்கைகளுடன் சித்தா கொரோனா மையத்தை ஏற்படுத்தினார். இந்தநிலையில் தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சித்த மருத்துவ முறையில் 200 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கு அமைச்சர் மூர்த்தி ஏற்பாடு செய்துள்ளார். மேலும் அவர் தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கொரோன சிகிச்சை மையம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி உள்ளார்.
சித்த மருத்துவ மையம்
இந்த பணிகளை அமைச்சர் மூர்த்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சித்த மருத்துவத்தின் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உண்டு. எனவே கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நோயாளிகளுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை தரப்பட்டு நல்ல பலன் கிடைக்கிறது. எனவே யாதவ கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்காக 120 படுக்கைகளுடன் சித்த மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்கன் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மையம் நாளை(இன்று) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. அதனை அமைச்சர் நேரு திறந்து வைக்கிறார். இந்த மையத்திற்கான ஏற்பாடுகளை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து மதுரை மாநகராட்சியும், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும் செய்து இருக்கின்றன. இங்கு 5 சித்த மருத்துவர்கள் மற்றும் 3 செவிலியர்கள் பணியில் இருப்பார்கள். மேலும் இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு 3 வேளை சத்தான உணவும் வழங்கப்படும்.
தோப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 364 படுக்கைகளுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கை வசதிகள் அமைக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முதற்கட்டமாக 200 படுக்கைகளும், தொடர்ந்து 300 படுக்கை வசதியும் ஏற்படுத்தப்படும். இந்த சிகிச்சை மையம் இன்னும் 7 நாட்களில் பயன்பாட்டிற்கு வரும். மேலும் இந்த மையத்திற்கு தேவையான குடிநீர் வசதி போன்றவற்றை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் வழங்குவதற்காக மின்மாற்றி அமைக்கும் பணியும் நடக்க உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story