முழு ஊரடங்கால் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடின


முழு ஊரடங்கால் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடின
x
தினத்தந்தி 17 May 2021 1:18 AM IST (Updated: 17 May 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கினால் நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் வெறிச்சோடின.

விருதுநகர், 
 முழு ஊரடங்கினால் நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் வெறிச்சோடின. 
முழு ஊரடங்கு 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை தளர்வுகளுடனான முழுஊரடங்கை அறிவித்தது.   கொரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்குவந்தது.
 இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் எதுவும் இன்றி கூடுதல் கட்டுப்பாடுகளுடன் முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் வெகுவாக குறைந்திருந்தது.
 நடவடிக்கை 
ஆனாலும் போலீசார்வாகன சோதனையினை தீவிரப்படுத்தினர். தேவையில்லாமல் வாகனங்களில் செல்வோர்களை நிறுத்தி அபராதம் விதித்தனர். 
 அதிகரித்து வரும் நோய்பரவலின் தீவிரத்தை உணர்ந்து அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கினை மாவட்ட மக்கள் முழுமையாக கடைபிடித்து ஒத்துழைப்பு அளித்தனர். 
மருந்து கடை 
 பெட்ரோல் பங்குகள், மருந்து கடைகள், நாட்டுமருந்துகடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. சைக்கிளில் கேன்களில் வைத்து டீ விற்பனை செய்யவும் அனுமதிக்கவில்லை. தென் மாவட்டங்களுக்கான ெரயில்கள் இயக்கப்பட்டாலும் அவைகளிலும் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்திருந்ததால் ெரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோக்கள் இயக்கப்படாத நிலை இருந்தது.  நகர்ப்பகுதிகளில் முற்றிலுமாக ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. விருதுநகரில் கிழக்கு பகுதியில் போலீசார் பத்திரிக்கை விற்பனைக்கு தடை விதிக்கும் வகையில் செயல்பட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாளிடம் புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்உரிய அறிவுறுத்தல் வழங்கினார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பத்திரிகை விற்பனைக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டது.
தவிர்க்க வேண்டும் 
அரசு விதிமுறைகளை அமல்படுத்தும் போது விதிமுறைகள் என்னென்ன, எவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதை போலீசார் தெளிவாக புரிந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். தேவையற்ற நடைமுறைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
 ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், காய்கறி புத்தூர் மார்க்கெட் ஆகியவை அடைக்கப்பட்டு முக்கிய சாலைகள் அனைத்தும்  வெறிச்சோடி காணப்பட்டது.  சிவகாசி யூனியன் அலுவலகம் உள்ள பகுதியில் இருந்த இறைச்சி கடையில் அதிகளவில் பொது மக்கள் கூடி நின்று இறைச்சியை வாங்கி சென்றனர். இதே போல் நாரணாபுரம் ரோட்டில் ஒரு இடத்தில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்த பொதுமக்கள் அங்கு சென்று இறைச்சி வாங்கினர். காலை 10 மணிக்கு பின்னர் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
அதேபோல சாத்தூர், ஆலங்குளம், தளவாய்புரம், காரியாபட்டி, நரிக்குடி, ராஜபாளையம், திருச்சுழி, அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, தாயில்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கினால் வெறிச்சோடி காணப்பட்டதுடன், அமைதியான சூழ்நிலை நிலவியது. போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

Next Story