கூட்டுத்திருப்பலி நடத்தப்படாததால் வெறிச்சோடிய ஆலயம்


கூட்டுத்திருப்பலி நடத்தப்படாததால் வெறிச்சோடிய ஆலயம்
x
தினத்தந்தி 17 May 2021 1:20 AM IST (Updated: 17 May 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுத்திருப்பலி நடத்தப்படாததால் ஆலயம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டை பேரூராட்சி பகுதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அலங்கார அன்னை ஆலயம் உள்ளது. வரதராஜன்பேட்டை அக்காலத்தில் அய்யம்பேட்டை என்று அழைக்கப்பட்டு நாயக்கர் காலத்தில் புகழ்பெற்ற வணிகத்தலமாக விளங்கி வந்துள்ளது. தமிழ் வளர்த்த வீரமாமுனிவர் இவ்வூரின் முதல் பங்கு தந்தையாக (1711- 1712) பணியாற்றியவர் என்பது சிறப்புக்குரியது. வீரமாமுனிவர் மற்றும் புனித அருளானந்தரின் பாதம்பட்ட பகுதியாகவும், செழுமையான ஆன்மிகம் வளம் நிறைந்த ஊராகவும் திகழ்ந்து வருகிறது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊர் பொது மக்களால் ரூ.2½ கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு இறை மக்களுக்கு நேர்ந்த அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு வழிபாட்டு தலங்களை மூட உத்தரவிட்டதை அடுத்து, அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு உள்ளன. அதன்படி வரதராஜன்பேட்டை புனித அலங்கார அன்னை ஆலயமும் மூடப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெறுவது வழக்கம். நேற்று திருப்பலி நடைபெறாததால் வழக்கமான உற்சாகம் இழந்து, அப்பகுதி வெறிச்சோடி அமைதியாக காணப்பட்டது. நேற்று முழு ஊரடங்கால் பொதுமக்கள் வெளியில் வராமல் அவரவர் வீட்டிலேயே இருந்தனர். வரதராஜன்பேட்டை கடைவீதியில் மருந்து, பால் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story