ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கை வசதிக்காக புதிய கட்டிடம்- அமைச்சர் சு.முத்துசாமி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்
ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கை வசதிக்காக புதிய கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
ஈரோடு
ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கை வசதிக்காக புதிய கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கை வசதிக்காக புதிய கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
கூடுதல் படுக்கை வசதி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்தநிலையில் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மையங்களில் கூடுதல் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கை வசதிகளுக்காக உடனடியாக புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.
கொரோனா சிகிச்சை மையம்
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது. அங்கு கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்காக புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. இதில் முதல்கட்டமாக 300 படுக்கைகளும், அடுத்தகட்டமாக 200 படுக்கைகளும் அமைக்கும் வகையில் கட்டிடம் கட்டப்படுகிறது.
அங்கு கொரோனா பரிசோதனை மையம், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை மையம், தடுப்பூசி போடும் பகுதி என தனித்தனியாக அமைக்கப்படுகிறது. சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மேலும், அரசு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகியன கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
பொது நோயாளிகள்
கொரோனா நோயாளிகளுக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 150 படுக்கைகளும், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 550 படுக்கை வசதிகளும் உள்ளன. மற்ற அரசு ஆஸ்பத்திரிகள், வட்டார ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியன பொது நோயாளிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும். எனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களை மட்டும் அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். அங்கு உணவு, தங்குமிடம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது.கொரோனா நோய் தொற்று தொடர்பான மருத்துவ ஆலோசனை, அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கை வசதி விவரங்கள், ஆக்சிஜன் தேவை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்ற விவரங்களுக்கு 24 மணிநேரமும் செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை (வார் ரூம்) தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story