பள்ளிப்பட்டு பஜார் தெருவில் அமைக்கப்பட்ட தடுப்புகள் 3 நாட்களில் அகற்றம் பொதுமக்கள் அதிர்ச்சி


பள்ளிப்பட்டு பஜார் தெருவில் அமைக்கப்பட்ட தடுப்புகள் 3 நாட்களில் அகற்றம் பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 17 May 2021 6:10 AM IST (Updated: 17 May 2021 6:10 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்ட நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு தடுப்புகள் அகற்றப்பட்டது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பஜார் தெருவில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதாக கூறி சுகாதாரத்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் இணைந்து கடந்த 12-ந் தேதி மாலை பஜார் தெருவில் சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகளை அமைத்தனர்.

இதனால் அந்த பகுதி எச்சரிக்கை(சிவப்பு) பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும், தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, பஜார் தெருவில் உள்ள பொதுமக்கள் வெளியே செல்லவும், அத்தியாவசிய பொருட்களை வாங்க பஜார் தெருவிற்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். மேலும் பள்ளிப்பட்டு பேரூராட்சியை ஒட்டியுள்ள ஆந்திர மாநில பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் இப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்களே ஆன நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த தடுப்புகள் திடீரென்று அகற்றப்பட்டன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட பஜார் தெருவில் அமைக்கப்பட்ட தடுப்புகள் மூன்றே நாட்களில் அகற்றப்பட்டது பள்ளிப்பட்டு பேரூராட்சி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரணமாக ரெட் ஜோன் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு 14 நாட்களுக்கு அந்த தடுப்பு அகற்றப்படாமல் இருக்கும். இதனால் தற்போது கொரோனா பரவும் சூழல் ஏற்படுள்ளது.

மேலும், தற்போது பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லை. பள்ளிப்பட்டு அருகே உள்ள பொதட்டூர்பேட்டை பேரூராட்சியின் செயல் அலுவலர் தான் இங்கு பொறுப்பு வகித்து வருகிறார்.

பள்ளிப்பட்டு செயல் அலுவலர் பதவி கடந்த பல மாதங்களாக காலியாக உள்ளது. எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா அவர்கள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு ஒரு செயல் அலுவலரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்று பள்ளிப்பட்டு பேரூராட்சி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story