காவலாளிகளை கட்டிப்போட்டு விட்டு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கொள்ளையடித்த 8 பேர் கைது


காவலாளிகளை கட்டிப்போட்டு விட்டு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கொள்ளையடித்த 8 பேர் கைது
x
தினத்தந்தி 17 May 2021 4:54 PM IST (Updated: 17 May 2021 4:54 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே காவலாளிகளை கட்டிப்போட்டுவிட்டு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பாலகுறிச்சியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் திருவாரூர் மாவட்டம் கோமல் பிச்சப்பாக்கம் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 48) என்பவர் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த மாதவன் (45), வேதாரண்யம் அன்னாபேட்டை பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் (43), திருக்குவளை வடகூர் பகுதியை சேர்ந்த வரதராஜன் மகன் வீரமணி ஆகிய மூவரும் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றனர்.

முழு ஊரடங்கு காரணமாக கடந்த 10-ந்தேதியில் இருந்து பாலகுறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடை பூட்டப்பட்டு இருந்தது. இந்த டாஸ்மாக் கடையில் கீழையூர் மேல ஈசனூர் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ் (59), முப்பத்தி கோட்டகம் மாதாகோவில் தெரு பகுதியை சேர்ந்த அந்தோணி (45) ஆகிய இருவரும் காவலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் டாஸ்மாக் கடையின் அருகில் உள்ள சிறிய கீற்றுக் கொட்டகையில் படுத்து தூங்குவது வழக்கம்.

மதுபாட்டில்கள் கொள்ளை

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி நள்ளிரவு 1 மணி அளவில் அந்த டாஸ்மாக் கடைக்கு 10 பேர் வந்துள்ளனர். அப்போது அவர்கள் காவலாளிகளை கட்டிப்போட்டு கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி உள்ளனர். பின்னர் அவர்கள், டாஸ்மாக் கடையின் ‌‌ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு இருந்த ரூ.73 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து கொண்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த டாஸ்மாக் கடைக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரகா‌‌ஷ் மீனா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து கடை மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் மேற்பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

8 பேர் கைது

இந்த நிலையில் தனிப்படை போலீசார் வேளாங்கண்ணி அருகே செருதூர் பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திருப்பூண்டியில் இருந்து நாகையை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கீழ்வேளூர் தாலுகா திருக்கண்ணங்குடி பகுதியை சேர்ந்த காளமேகம் மகன் ஹரிஹரன் (வயது 27), அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் குருபாலன் (20), தனு‌‌ஷ்கோடி மகன் தனராஜ் (20) என்பதும், இவர்கள் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலகுறிச்சி டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளையில் தொடர்புடைய நாகை செல்லூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் ரதீ‌‌ஷ்குமார் (26), அதே பகுதியை சேர்ந்த பாலு மகன் கலையரசன் (20),கலைவாணன் மகன் சதீ‌‌ஷ் (27), திருக்கண்ணங்குடி பகுதியை சேர்ந்த தனு‌‌ஷ்கோடி மகன் தமிழ்மாறன்(21),ராஜேந்திரன் மகன் பிரவீன் (19) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள், 45 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.10 ஆயிரம், காவலாளியிடம் இருந்து பறித்து சென்ற செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஆழியூர் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி மகன் வினோத், செல்லூர் பகுதியை சேர்ந்த பாலு மகன் முத்தரசன ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story