பள்ளிப்பட்டு அருகே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பராமரிப்பு மையம் தொடங்கிய 4 மணி நேரத்தில் படுக்கைகள் நிரம்பின
பள்ளிப்பட்டு அருகே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பராமரிப்பு மையம் தொடங்கப்பட்டது. தொடங்கிய 4 மணி நேரத்தில் படுக்கைகள் நிரம்பின.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். இந்தநிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க திருத்தணி, திருவள்ளூர், சென்னை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.
தொற்று ஏற்பட்டவர்கள் பலர் நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்கிறோம் என்று கூறி ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கி விடுகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிப்பட்டு அருகே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்ககளுக்கு சிகிச்சை அளிக்க பராமரிப்பு மையம் தொடங்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரி பேட்டை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 படுக்கைகளுடன் கூடிய இடைக்கால பராமரிப்பு மையம் நேற்று தொடங்கப்பட்டது. இதில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 4 படுக்கைகளும், 11 சாதாரண படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிப்பட்டு வட்டார சுகாதார மருத்துவர் தனஞ்செழியன் கலந்துகொண்டு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்று சுகாதார மையத்திற்கு வந்த நோயாளிகளுக்கு பரிசோதனை செய்தார்.
இதில் பலருக்கு கொரோனா தொற்று இருந்ததையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பராமரிப்பு மையம் தொடங்கிய 4 மணி நேரத்தில் அங்கு இருந்த படுக்கைகள் அனைத்தும் கொரோனா தொற்று நோயாளிகளால் நிரம்பி விட்டன.
தற்போது பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
அதனால் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பள்ளிப்பட்டு தாலுகா அரசு ஆஸ்பத்திரியிலும், பொதட்டூர்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கைகளை ஏற்படுத்த வேண்டுமென்று பள்ளிப்பட்டு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story