திருவாரூரில், கடைகள் முன்பு போலீசார் ‘வட்டம்’ வரைந்தனர் சமூக இடைவெளியின்றி மக்கள் கூடுவதை தடுக்க நடவடிக்கை


திருவாரூரில், கடைகள் முன்பு போலீசார் ‘வட்டம்’ வரைந்தனர் சமூக இடைவெளியின்றி மக்கள் கூடுவதை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 21 May 2021 10:42 AM GMT (Updated: 21 May 2021 10:42 AM GMT)

திருவாரூரில் கடைகள் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி கூடுவதை தடுப்பதற்காக போலீசார் வட்டம் வரைந்தனர்.

திருவாரூர்,

கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதால், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மளிகை, காய்கறிகளை வாரத்தின் தேவைக்கு ஏற்ப மொத்தமாக வாங்காமல் நாள்தோறும் கடைகளுக்கு சென்று வாங்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இதனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பொருட்களை வாங்குவதற்காக திருவாரூர் கடைவீதியில் மக்கள் அதிக அளவில் கூடிவிடுகின்றனர். அப்போது சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகி விடுகிறது.

வட்டம் வரைந்தனர்

கொரோனா தாக்காமல் இருக்க ஒவ்வொருவரும் பொது இடங்களில் சமூக இடைவெளியை அதாவது தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவ வல்லுனர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் மக்களிடையே சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், சமூக இடைவெளியின்றி கூடுவதை தடுக்கும் விதமாகவும் செய்யும் விதமாகவும் கடைகள் முன்பு குறிப்பிட்ட இடைவெளியில் வட்டம் வரைய முடிவெடுத்தனர்.

இதற்காக வண்ணம் தீட்டுபவர்கள் உதவியுடன் கடைவீதியில் உள்ள மளிகை, காய்கறி கடைகள் முன்பு போலீசாரே வட்டங்கள் வரைந்தனர். கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க போலீசாரே முன்வந்து கடைகள் முன்பு வட்டம் வரைந்தது அனைவரிடத்திலும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Next Story