பழனி குதிரையாறு அணையில் தண்ணீர் திறப்பு
பழனி குதிரையாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
நெய்க்காரப்பட்டி:
பழனி அருகே குதிரையாறு அணை அமைந்துள்ளது. கொடைக்கானல் வனப்பகுதியில் மழை பெய்யும் காலங்களில் இந்த அணைக்கு நீர்வரத்து ஏற்படும். இந்த அணை மூலம் திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 4,600 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. குதிரையாறு அணையின் மொத்த நீர்மட்டம் 80 அடி ஆகும். பலத்த மழையால் அணையின் நீர்மட்டம் தற்போது 62 அடியாக உள்ளது.
இதற்கிடையே அணையின் இடது பிரதான கால்வாய், வலது பிரதான கால்வாய் மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதி பாசனத்துக்காக குதிரையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து குதிரையாறு அணையில் இருந்து நேற்று முதல் வருகிற ஜூலை மாதம் 4-ந்தேதி வரை 45 நாட்களுக்கு வினாடிக்கு 31 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து குதிரையாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. முன்னதாக நடந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்கு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி தலைமை தாங்கி, மதகு ஷட்டரை இயக்கி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். உதவி பொறியாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். இதில், பொதுப்பணித்துறை அலுவலர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story