தடுப்புச்சுவர் இடிந்ததால் சாலை பெயர்ந்தது
ஊட்டியில் பெய்த தொடர் மழையால் தடுப்புச்சுவர் இடிந்து, சாலை பெயர்ந்து உள்ளது. அதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
ஊட்டியில் பெய்த தொடர் மழையால் தடுப்புச்சுவர் இடிந்து, சாலை பெயர்ந்து உள்ளது. அதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தடுப்புச்சுவர் இடிந்தது
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது. தொடர் மழையால் தண்ணீர் ஊறிக்கொண்டே இருப்பதாலும், மண் ஈரப்பதமாக உள்ளதாலும் ஆங்காங்கே தடுப்புச்சுவர்கள் இடிந்து விழும் நிலை உள்ளது.
இந்த நிலையில் ஊட்டி தலையாட்டுமந்து பகுதியில் தார் சாலையின் பக்கவாட்டில் கற்களால் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மழை காரணமாக தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததோடு, சாலை பெயர்ந்து உள்ளது.
மண் விழுந்து கொண்டே இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அங்கு செல்லாமல் இருக்க சுற்றிலும் தடுப்புகள் வைத்து, கயிறு கட்டப்பட்டு உள்ளது. இதேபோல் அப்பகுதியில் நடைபாதையை ஒட்டி சிறிய மழைநீர் கால்வாய் செல்கிறது. தொடர் மழையால் அங்கு மண்சரிவு ஏற்பட்டு நடைபாதை அந்தரத்தில் தொங்குகிறது. மேலும் ஒரு வீடு பகுதி சேதம் அடைந்து உள்ளது.
விபத்து ஏற்படும் அபாயம்
இதைத்தொடர்ந்து நேற்று ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி மழையால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அப்பகுதி மக்கள் பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தலையாட்டு மந்து பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வரும் முக்கிய சாலை பெயர்ந்து அந்தரத்தில் தொங்குகிறது.
இதனால் அந்த வழியாக வாகனங்கள் சென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தடுப்புச்சுவர் கட்டி சாலையை சீரமைக்க வேண்டும். நடைபாதை, மழைநீர் கால்வாய் சேதம் அடையாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story