வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி மும்முரம்
முதுமலை வனப்பகுதியில் 2-வது நாளாக வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடந்தது.
கூடலூர்,
முதுமலை வனப்பகுதியில் 2-வது நாளாக வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடந்தது.
2-வது நாளாக கணக்கெடுப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், கரடிகள், மான்கள், செந்நாய்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு காலநிலைகளுக்கு ஏற்ப வனத்துறையினர் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய உள்ளது. இதையொட்டி பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியை முதுமலையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் தொடங்கினர். சுமார் 100-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வனத்துக்குள் சென்று நேரடியாக காணுதல், கால் தடயங்கள் மற்றும் எச்சங்களை கொண்டு வனவிலங்குகளை கணக்கெடுத்து வருகின்றனர்.
கரடிக்கு அருகில் சென்று...
இந்த பணி நேற்று 2-வது நாளாக புலிகள் காப்பக வனத்தில் மும்முரமாக நடைபெற்றது. அப்போது புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி அருகே மாவனல்லா வனப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்த சமயத்தில் கரடி ஒன்று இரை தேடியவாறு உலாவி கொண்டிருந்தது. இதைக்கண்ட வன ஊழியர்கள் சற்று தொலைவில் நின்று பார்வையிட்டனர். பின்னர் கரடியின் அருகே சென்றவாறு மயிர் கூச்செரியும் வகையில் தங்களது செல்போனில் படம் பிடித்து பதிவு செய்தனர்.
அதிகளவில் மான்கள்
இதுகுறித்து வன ஊழியர்கள் கூறியதாவது:- வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியின் போது காட்டு யானைகள், மான்கள் அதிகளவு காண முடிகிறது. வன விலங்குகளில் மிகவும் ஆபத்தானது கரடி. மசினகுடி பகுதியில் கரடிகள் அதிகளவு உள்ளது.
கணக்கெடுப்பு பணியின் போது கரடி தென்பட்டது. இருப்பினும் மிகவும் சாதுர்யமாக அதன் அருகே சென்று கணக்கெடுப்புக்காக பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story