வீடுகளை முற்றுகையிட்ட காட்டுயானைகள்


வீடுகளை முற்றுகையிட்ட காட்டுயானைகள்
x
தினத்தந்தி 21 May 2021 3:13 PM GMT (Updated: 21 May 2021 3:15 PM GMT)

வீடுகளை முற்றுகையிட்ட காட்டுயானைகள்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே அத்திசால், பாதிரிமூலா, நாய்ச்சேரி, செம்பக்கொல்லி ஆகிய கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்களை வளர்த்து உள்ளனர். 

ஆனால் இரவில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகள் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிடுவதோடு விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்கின்றன. இதனால் அவர்கள் பீதி அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் 5 காட்டுயானைகள், மேற்கண்ட கிராமங்களில் புகுந்தன. தொடர்ந்து ரகு, கிருஷ்ணன், பாலன், கருப்பன், கேசவன் உள்பட 6 பேரின் தோட்டங்களில் இருந்த வாழை, தென்னை, பாக்கு மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. 

மேலும் பலா மரங்களில் பழங்களை துதிக்கையால் பறித்து போட்டு தின்றன. தொடர்ந்து அய்யன்கொல்லியில் இருந்து மூலக்கடை வழியாக எருமாடு செல்லும் சாலையில் உலா வந்தன. பின்னர் அத்திசால் பகுதியில் உள்ள அரசு கோழிப்பண்ணை நுழைவு வாயிலை உடைத்தன. 

மேலும் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சேரம்பாடி வனச்சரகர் ஆனந்தகுமார் தலைமையிலான வனத்துறையினர் நேரில் வந்து காட்டுயானைகளை விரட்டியடித்தனர். அவை சாமியார் மலையடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


Next Story