பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிப்பு
ஊரடங்கு காரணமாக வெளியூரில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வர முடியாததால் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி,
ஊரடங்கு காரணமாக வெளியூரில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வர முடியாததால் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஊரடங்கு
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. தற்போது கிலோவுக்கு ரூ.20-க்கு குறையாமல் கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் ஓரளவு ஆறுதல் அடைந்து உள்ளனர்.
இதற்கிடையில் பச்சை தேயிலை பறிக்கும் பணிக்கு உள்ளூரில் போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால், வெளியூரில் இருந்து வாகனங்களில் தொழிலாளர்களை விவசாயிகள் அழைத்து வந்தனர். ஆனால் தற்போது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
பணி பாதிப்பு
இதையொட்டி பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் தனியார் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வெளியூரில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வர முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.
இதனால் தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து கோத்தகிரி பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோத்தகிரி பகுதியில் நிலவிய மாறுபட்ட காலநிலையால் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்கியது. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதித்தது. தற்போது தொடர் மழை பெய்து, பச்சை தேயிலை மகசூல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
நஷ்டம்
ஆனால் ஊரடங்கு காரணமாக வெளியூர்களில் இருந்து பச்சை தேயிலை பறிக்க வாகனங்களில் தொழிலாளர்களை அழைத்து வர முடியாத நிலை உள்ளது.
இதனால் பச்சை தேயிலையை பறித்து தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதே நிலை நீடித்தால் இலைகள் முற்றி வீணாகும் நிலை ஏற்படும். இதனால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்கள்.
Related Tags :
Next Story