கல்வராயன்மலையில் வனத்துறை அதிகாரிகளின் மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு
கல்வராயன்மலையில் வனத்துறை அதிகாரிகளின் மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்த சாராய வியாபாரிகள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
கச்சிராயப்பாளையம்
சாராய ஊறல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள அருவங்காடு வனப்பகுதியில் மர்மநபர்கள் சிலர் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறல் பதப்படுத்தி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வெள்ளிமலை வனச்சரகர் பாலசந்தர், வனக்காப்பாளர் முகமது அலி ஆகியோர் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் அருவங்காட்டுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை வனப்பகுதியில் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு காட்டுப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைவான இடத்தில் சாராய ஊறல் பதப்படுத்தி வைத்திருந்ததை கண்டுபிடித்த வனத்துறையினர் அதை கீழே கொட்டி அழித்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு
இதையடுத்து வனப்பகுதியை விட்டு வெளியே வந்த அவர்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி இருந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது. அங்கு அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பாலசந்தர், முகமது அலி இருவரும் வனப்பகுதிக்கு சென்றநேரத்தில் யாரோ மர்ம நபர்கள் அவர்களின் மோட்டார் சைக்கிள்களை தீவைத்து எரித்துள்ளனர். இது குறித்து வனச்சரகர் பாலசந்தர் கரியாலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சாராய வியாபாரிகள் 3 பேர் வனத்துறை அதிகாரிகளின் மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்தது தெரிய வந்தது. இதையடுத்து சாராய வியாபாரிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story