தஞ்சை புதிய மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் செயல்பாட்டுக்கு வந்தன


தஞ்சை புதிய மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் செயல்பாட்டுக்கு வந்தன
x

தஞ்சை புதிய மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் காய்கறி மார்க்கெட் மற்றும் மீன் மார்க்கெட் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை காமராஜர் மார்க்கெட் குழந்தை ஏசு கோவில் அருகே செயல்பட்டு வந்தது. இதேபோல் மீன் மார்க்கெட் கீழவாசல் பகுதியில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவதை தடுக்க காய்கறி மார்க்கெட் மற்றும் மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்வது என அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி காமராஜர் மார்க்கெட் புதிய பஸ் நிலையத்துக்கும், கீழவாசல் மீன் மார்க்கெட் சில்லரை வணிகம் கரந்தையில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்துக்கும், திலகர் திடலில் உள்ள மாலை நேர மார்க்கெட் திலகர் திடலுக்கும், கீழவாசலில் உள்ள சாலையோர கடைகள் கொடிமரத்து மூலையிலிருந்து தென் கீழ் அலங்கம் வரை உள்ள அகழி கரைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இந்த கடைகள் நேற்று முதல் அந்தந்த இடங்களில் செயல்படத் தொடங்கியது.

போலீசார் கண்காணிப்பு

தஞ்சை புதிய பஸ் நிலையம் பகுதியில் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் இருந்த 90 பெரிய கடைகள் மற்றும் 230 சில்லறை கடைகள் நேற்று முதல் செயல்பட்டன. பொதுமக்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இதுபோல் மீன் மார்க்கெட் சில்லரை வணிகமும் கரந்தையில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு செயல்படத் தொடங்கியது. காய்கறி மார்க்கெட் மற்றும் மீன் மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Next Story