விழுப்புரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை
விழுப்புரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
விழுப்புரம்,
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. நேற்று விழுப்புரத்தில் மழை ஓய்ந்து மதியம் வரை வெயில் சுட்டெரித்தது. மாலை 3 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடனும், மப்பும், மந்தாரமுமாக காட்சியளித்தது. மாலை 6 மணியளவில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் 45 நிமிடத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கியது.
சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
இதனால் சாலைகளில் மழைநீர், வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக விழுப்புரம் திரு.வி.க. சாலை, நேருஜி சாலை, சென்னை- திருச்சி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்தபடி சீரான வேகத்தில் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது. அதுமட்டுமன்றி விழுப்புரம் புதிய பஸ் நிலையம், கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை ஆகிய இடங்களிலும் மழைநீர் தேங்கியது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கினால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் திடீரென பெய்த இந்த மழையினால் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மழைநீரில் நனைந்தனர். இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து மாலை வேளையில் இதமான குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story