கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்தவர்களின் 525 வாகனங்கள் பறிமுதல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறகைளை மீறி சுற்றித்திரிந்தவர்களின் 525 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10,715 பேர் மீது வழக்கு
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழக அரசின் கொரோனா தொற்று விதிகளை மீறி முககவசம் அணியாத 10 ஆயிரத்து 128 பேர், சமூக இடைவெளியை பின்பற்றாத 587 பேர் என மொத்தம் இதுவரை 10 ஆயிரத்து 715 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.23 லட்சத்து 19 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றித்திரிந்த 525 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 525 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
21,680 லிட்டர் சாராய ஊறல்
மேலும் கல்வராயன்மலை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொரோனா ஊரடங்கை மீறி மது மற்றும் சாராயம் விற்றவர்கள், காய்ச்சியவர்கள் என 83 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு 1,565 லிட்டர் சாராயமும், 220 லிட்டர் அளவு மதுபாட்டில்கள் மற்றும் 21 ஆயிரத்து 680 லிட்டர் சாராய ஊறல்களும் அழிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடித்து, முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா பரவலை தடுக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story