தொற்றால் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் குறித்து ஆய்வு
வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கொரோனா தொற்றால் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் உள்ளனரா என்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
வேலூர்
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பலர் இறந்து வருகின்றனர். தொற்று பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று காரணமாக தாய், தந்தையை இழந்த அல்லது கவனிக்கப்படாமல் உள்ள குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பார்த்திபன் தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சங்கீத், மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி, குழந்தைகள் நல குழும தலைவர் கலைவாணன் உள்ளிட்ட 7 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து கலெக்டர் (பொறுப்பு) பார்த்திபன் கூறியதாவது:-
குழந்தைகள் குறித்த பட்டியல்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி உள்ளது. எனவே இதுவரை தாய், தந்தையை இழந்த குழந்தைகள் வேலூர் மாவட்டத்தில் உள்ளார்களா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள பெற்றோர்கள் யார்? என்றும் அவர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உள்ளதா? என்றும் கண்காணிக்கப்பட உள்ளது. அவ்வாறு குழந்தைக்கு பாதுகாப்பு இல்லாமலோ, தனியே தவிக்கும் சூழல் இருந்தாலோ அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்து கண்காணிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story