சிதம்பரத்தில் கிருமிநாசினி தெளிக்க அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக செல்ல அனுமதித்தது ஏன்? அதிகாரியுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தால் பரபரப்பு


சிதம்பரத்தில்  கிருமிநாசினி தெளிக்க அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக செல்ல அனுமதித்தது ஏன்? அதிகாரியுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 May 2021 10:49 PM IST (Updated: 21 May 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் கிருமிநாசினி தெளிக்க அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக செல்ல அனுமதித்தது ஏன்? என்று அதிகாரியுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சிதம்பரத்தில் நடந்த    நிகழ்ச்சியில் கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கிருமி நாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

தி.மு.க. எதிர்ப்பு
தொடர்ந்து 4 வீதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணியை  பாண்டியன் எம்.எல்.ஏ. தனது கட்சி நிர்வாகிகளுடன்  4 வீதிகளிலும் நடந்து சென்று  பார்வையிட்டார். 
இதற்கு  தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர், நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், ஏ.ஆர்.சி.மணி, வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சி.க.ராஜன், வெங்கடேசன், விஜயகுமார், இளைஞர் அணி மக்கள் அருள், வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.எம்.ராஜா உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து ஒன்று திரண்டனர். 

வாக்குவாதம் 

பின்னர் அவர்கள், கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் போது கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்த கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ., தற்போது ஊரடங்கு நேரத்தில் அ.தி.மு.க.வினருடன் ஊர்வலமாக சென்றதை கண்டுகொள்ளாதது ஏன்? என்று கூறி நகராட்சி பொறியாளர் மகாராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி பகுதியில் தார்சாலை போட்டும், புதை வடிகால் மூடியை உயர்த்தாமல் அதன்மீது தார்சாலை போட்டனர். மூடிவிட்டு மீண்டும் தோண்டும்போது சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு சேதமடைகிறது. இதனால் விபத்துகளும் அதிகளவில் நேரிடுகிறது. இதை தடுக்க வேண்டும். சிமெண்டு சாலைகள் போட்டதில் ஒப்பந்த விதிமீறலில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும் இது தொடர்பாக நகராட்சி மேலாளர் (பொறுப்பு) ஆனந்தராஜை சந்தித்து தி.மு.க.வினர் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

Next Story