கொரோனா தொற்றை எதிர்கொள்ளஅனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கலெக்டர் அறிவுறுத்தல்
கொரோனா தொற்றை எதிர்கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டை
படுக்கைகள் காலி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் கட்ட பரவல் அதிகமாக உள்ள நிலையில் அதில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் 300 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், 234 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 190 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளும், 115 ஆக்சிஜன் வசதியில்லாத படுக்கைகளும் உள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் தமிழக முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. தற்போதைய நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் 82, தனியார் மருத்துவமனைகளில் 67 காலியாக உள்ளன.
தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் மற்ற நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து துணை சுகாதார மருத்துவமனைகளிலும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கப்படுகிறது. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.
பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவுறுத்தலின்படி தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியே வரும் பட்சத்தில் கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்லவும், கூட்டம் உள்ள இடங்களிலும், மற்ற இடங்களிலும் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா நோயை எதிர்கொள்ள ஒரே ஆயுதமான தடுப்பூசியை அனைவரும் தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு உதவிட ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு, மருத்துவர்களின் மூலமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு ஏதேனும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள மருத்துவர்களை 04172-273166, 273188 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.
Related Tags :
Next Story