புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிப்பத்தவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் இடைத்தரகருடன் கைது காட்டுமன்னார்கோவிலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை


புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிப்பத்தவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் இடைத்தரகருடன் கைது காட்டுமன்னார்கோவிலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 21 May 2021 11:08 PM IST (Updated: 21 May 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிப்பத்தவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் இடைத்தரகருடன் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில், 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் உடையார்குடியை சேர்ந்தவர் ஹாஜா மைதீன். இவர் புதிதாக  ரேஷன்கார்டு (குடும்ப அட்டை) வேண்டி காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் விண்ணப்பித்து இருந்தார். 

இந்த நிலையில், ஹாஜாமைதீனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் இடைத்தரகராக உள்ள வீராணநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர், ரேஷன்கார்டு உடனடியாக பெற வேண்டும் என்றால், முதுநிலை வருவாய் ஆய்வாளருக்கு ரூ. 500 லஞ்சம் தர வேண்டும் என்று கூறினார். 

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹாஜாமைதீன் இதுபற்றி கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், நேற்று இன்ஸ்பெக்டர் மாலா தலைமையிலான போலீசார் காட்டுமன்னார்கோவிலுக்கு வந்து, ரசாயன பவுடர் தடவிய 500 ரூபாய் நோட்டை ஹாஜாமைதீனிடம் கொடுத்து அனுப்பினர். 

இடைத்தரகருடன் கைது

அவர், அங்கு வட்ட வழங்கல் பிரிவில் பணியில் இருந்த  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியை சேர்ந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் மணிமாறன் (வயது 57) என்பவரிடம் ஹாஜாமைதீன் ரூ.500 கொடுத்தார். 

அந்த பணத்தை மணிமாறன் பெற்ற போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இடைத்தரகர் ராஜசேகரையும் போலீசார் கைது செய்தனர். 

தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வட்ட வழங்கல் அலுவலகத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டதுடன், அங்கிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.  

இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு சோதனை தொடங்கியது முதல் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் அலுவலகம் முன்பு காத்திருந்தனர். ஆனால் தங்களது பணிகளை முடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கைது நடவடிக்கை தொடர்பாக முழுவிவரங்களையும் வெளியிடமால் அங்கிருந்து அவசரகதியில் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 




Next Story