பருத்தி விளைச்சல் அமோகம்


பருத்தி விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 22 May 2021 1:18 AM IST (Updated: 22 May 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு பருத்தி நன்கு விளைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு பருத்தி நன்கு விளைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
பருத்தி சாகுபடி 
வத்திராயிருப்பு தாலுகாவுக்கு உட்பட்ட சுந்தரபாண்டியம், துலுக்கப்பட்டி, மூவரை வென்றான், இலந்தைக்குளம், கோட்டையூர், காடனேரி ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பருத்தி பயிரிடப்பட்டு விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தொடர்ச்சியாக பெய்த மழையால் கண்மாய்கள், கிணறுகள் ஆகியவற்றில் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் உள்ளதால் 10 ஆண்டுகள் கழித்து பருத்தி விவசாயத்தில் இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் கொண்டு விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
வறண்ட கிணறு 
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக மழை இன்றி நீர்நிலைகள் வறண்டு போயும், கிணறுகளில் தண்ணீரின்றி வறண்டும் கிடந்தது. இதனால் தாங்கள் பெரும்பாலும் பருவ மழையை நம்பியே விவசாயம் செய்து வந்தோம்.
பருத்தி விவசாயத்திற்கு அதிக அளவு தண்ணீர் தேவைப் படுவதால் பருத்தி விவசாயத்தை சில ஆண்டுகளாக செய்யாமல் இருந்தோம். பருத்திக்கு பதிலாக கம்பு, சோளம், எள், பருப்பு வகைகளை காலத்திற்கு ஏற்ப பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வந்தோம்.
நல்ல விளைச்சல் 
கடந்த ஆண்டு தொடர்ச்சியாக பெய்த மழையாலும் இந்த ஆண்டு கோடை காலத்தில் பெய்த மழையாலும், நீர் நிலைகள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் வந்துள்ளது. 
இந்த ஆண்டு தாங்கள் பருத்தி பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகிறோம். தற்போது பருத்திச் செடியில் பூக்கள் எடுத்து காய்கள் காய்த்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் காய்கள் அனைத்தும் விளைந்து பருத்தி பஞ்சு எடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்ததால் பருத்தி நன்கு விளைந்து இந்த ஆண்டு தங்களுக்கு போதுமான அளவு லாபத்தை கொடுக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story