மதுரையில் ஒரே நாளில் 27 பேரின் உயிரை பறித்த கொரோனா
மதுரையில் நேற்று ஒரே நாளில் 27 பேர் கொரோனாவால் உயிர் இழந்தனர்
மதுரை
மதுரையில் நேற்று ஒரே நாளில் 27 பேர் கொரோனாவால் உயிர் இழந்தனர்.
கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்றும் 36 ஆயிரத்து 184 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதுபோல் 467 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களில் மதுரையை சேர்ந்த 27 பேரின் உயிரையும் கொரோனா பறித்து இருக்கிறது என்பது வேதனையான விஷயம்.
மதுரையில் கடந்த ஆண்டு முதல் அலையில் கூட ஒரே நாளில் இத்தனை பேர் உயிரிழக்கவில்லை. மதுரையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 21 பேர் மட்டுமே உயிரிழந்திருந்தனர். ஆனால் நேற்று மட்டும் ஒரே நாளில் 27 பேர் கொரோனா பாதிப்பால் இறந்தனர். அவர்களில் 22, 25 வயது இளம் பெண்களும் 32, 35 வயது வாலிபர்களும் அடங்குவர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்ததால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களை தவிர 58, 55, 52 வயது பெண்களும், 60, 60, 65, 72, 60, 75 வயது மூதாட்டிகளும் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதுபோல் 59, 44, 59, 58, 45, 53 வயதுடைய ஆண்களும், 63, 77, 75, 60, 81, 72, 75, 67 வயதுடைய முதியவர்களும் உயிரிழந்திருக்கிறார்கள். அதன்படி நேற்று ஒரே நாளில் 11 பெண்களும் 16 ஆண்களும் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களில் 15 பேர் தனியார் மருத்துவமனையிலும், ஒருவர் ெரயில்வே மருத்துவமனையிலும், 11 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு பலரின் உயிரை பறித்துக் கொண்டிருப்பது மதுரை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் குறைந்த வயதுடைய நபர்களும் உயிரிழப்பது மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரையில் நேற்றுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிப்பு
இதுபோல் நேற்று புதிதாக மதுரையில் 1,355 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த 13-ந் தேதி மதுரையில் ஒரே நாளில் 1,331 பேர் பாதிக்கப்பட்டு இருந்ததே அதிகபட்ச பாதிப்பாக இருந்தது. தற்போது அதையும் மிஞ்சும் வகையில் பாதிப்பு அதிகரித்துள்ளது. மதுரையில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 53 ஆயிரத்து 243 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் 40 ஆயிரத்து 180 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். நேற்று மேலும் 787 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து சென்றனர். இவர்களை தவிர்த்து 12 ஆயிரத்து 306 பேர் தற்போது அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா கேர் சென்டர்கள், வீட்டு தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
Related Tags :
Next Story