நாங்குநேரி அருகே ரெயில் பாதையில் தரைகீழ்மட்ட பாலம் அமைக்க எதிர்ப்பு
நாங்குநேரி அருகே ரெயில் பாதையில் தரைகீழ்மட்ட பாலம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாங்குநேரி, மே:
நாங்குநேரி-நெல்லை ரெயில் பாதையில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நெடுங்குளம் ெரயில்வே கிராசிங்கில் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் தரைகீழ் மட்ட பாலம் அமைக்கும் பணியையும் ெரயில்வே துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு நெடுங்குளம், தாழைகுளம், பிள்ளை குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் ெரயில்வே பணிகளை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இசக்கிப்பாண்டி தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் அப்பகுதி பொதுமக்கள், ெரயில்வே நிர்வாகம் தரப்பில் உதவி செயற்பொறியாளர் சங்கர்ராஜ், பிரிவு பொறியாளர் சண்முகம் மற்றும் துணை தாசில்தார் கணேஷ், பூலம் வருவாய் ஆய்வாளர் பொற்செல்வி, கரந்தாநேரி கிராம அலுவலர் ஜாகிர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், நெடுங்குளம் ெரயில்வே கிராசிங் அருகே பாசனக்குளம் இருப்பதால் அதிலிருந்து தண்ணீர் கசிந்து தரைக்கீழ் பாலத்தில் தேங்கி அதன் வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே தரைகீழ் மட்ட பாலத்தை அமைப்பதை ெரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும். அதற்கு பதிலாக மேம்பாலம் அமைக்கலாம் அல்லது தற்போது அதே இடத்தில் உள்ள ெரயில்வே கேட்டை அப்படியே பயன்படுத்தலாம் என்று தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ெரயில்வே பொறியாளர்கள், மின் மோட்டார் வைத்து உடனுக்குடன் தண்ணீரை வெளியேற்றி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி வசதி செய்து தருவோம் என்று கூறினர். ஆனாலும் அதை ஏற்க மறுத்த பொதுமக்கள், ஊரார் கருத்தை கேட்டறிந்த பின்னரே இதில் இறுதி முடிவை தெரிவிக்க முடியும் எனக்கூறி சமாதான கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
Related Tags :
Next Story