விவசாயிக்கு அபராதம் விதித்த போலீசார்


விவசாயிக்கு அபராதம் விதித்த போலீசார்
x
தினத்தந்தி 22 May 2021 1:56 AM IST (Updated: 22 May 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாநாட்டில், அறுவடை எந்திரத்துக்கு டீசல் வாங்க சென்ற விவசாயிக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரத்தநாடு;
பாப்பாநாட்டில், அறுவடை எந்திரத்துக்கு டீசல் வாங்க சென்ற விவசாயிக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
விவசாயிக்கு அபராதம் விதிப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில், அரசு சார்பில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் மருத்துவம் உள்ளிட்ட சில தேவைகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள், விவசாய பணியை எந்தவித தடையுமின்றி மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் அறுவடை எந்திரத்துக்கு டீசல் வாங்க சென்ற விவசாயிக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளது சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:-
விவசாயி
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள மேடையக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மகன் கண்ணன்(வயது 34).  விவசாயியான இவர், விவசாய பணிக்கு பயன்படுத்தும் கதிர் அறுவடை எந்திரத்துக்கு டீசல் வாங்குவதற்காக கடந்த 19-ந் தேதி மாலை 4 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் டீசல் கேனுடன் பாப்பாநாட்டுக்கு  சென்றார். 
ரூ.200 அபராதம் விதித்த போலீசார்
அப்போது கண்ணன் முககவசம் அணிந்து சென்று உள்ளார். இவரை பாப்பாநாடு அருகே உள்ள பிரதான சாலையில் தடுத்து நிறுத்திய போலீசார், ஊரடங்கை மீறி மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறி அபராதம் தொகை கட்டுமாறு கூறியுள்ளனர். 
அதற்கு கண்ணன், விவசாய பணிக்கு பயன்படுத்தப்படும் கதிர் அறுவடை எந்திரத்துக்கு டீசல் வாங்க பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு செல்வதாக கூறியுள்ளார். இதை ஏற்காத போலீசார், ரூ.200 அபராதம் செலுத்த வேண்டும் என்று அவரை கட்டாயப்படுத்தி உள்ளனர். 
இதனைத்தொடர்ந்து விவசாயி கண்ணனிடம் ரூ. 200-ஐ பெற்றுக்கொண்ட போலீசார் அவர் முககவசம் அணியாமல் பயணித்தார் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு இதற்காக அவரிடம் இருந்து ரூ.200 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதாக போலீசார் ரசீது வழங்கியுள்ளனர்.
பரபரப்பு
ஊரடங்கு காலத்திலும் விவசாயிகள், விவசாய பணிகளை மேற்கொள்ள தடை இல்லை என்று அரசு அறிவித்துள்ள நிலையில், அறுவடை எந்திரத்துக்கு டீசல் வாங்க சென்ற விவசாயியை தடுத்து நிறுத்தி ரூ.200 போலீசார் அபராதம் வசூலித்ததாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தமிழக முதல்-அமைச்சர், வேளாண்மை துறை அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு விவசாயி கண்ணன் சார்பில் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story