நெல்லையில் அரிவாளுடன் மிரட்டல் விடுத்த மேலும் 3 பேர் கைது
நெல்லையில் அரிவாளுடன் மிரட்டல் விடுத்த மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை, மே:
நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் அளித்தவர்களை மிரட்டுவதற்காக உடையார்பட்டி பகுதிக்கு 4 பேர் வந்தனர். அதில் 2 பேர் கையில் அரிவாளை வைத்திருந்தனர். அவர்கள் உடையார்பட்டி -மேகலிங்கபுரம் மெயின் ரோட்டில் நின்று அரிவாளை சுழற்றி அங்கிருந்த மக்களை மிரட்டினார்கள். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை வெட்டுவது போல் விரட்டிச்சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த கும்பலை சேர்ந்த வெள்ளப்பாண்டி என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று தாழையூத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் மதன் (வயது 21), சிந்துபூந்துறையை சேர்ந்த மாரிமுத்து மகன் பாஸ்கர் (24), மேகலிங்கபுரத்தை சேர்ந்த சுரேஷ் மகன் சிவகணேஷ் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story