திருச்சி அரசு மருத்துவமனை, என்.ஐ.டி. உள்பட 3 இடங்களில் 670 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


திருச்சி அரசு மருத்துவமனை, என்.ஐ.டி. உள்பட 3 இடங்களில்  670 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 22 May 2021 2:02 AM IST (Updated: 22 May 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரசு மருத்துவமனை, திருச்சி கலையரங்க திருமண மண்டபம், என்.ஐ.டி. ஆகியவற்றில் மொத்தம் 670 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருச்சி, 
திருச்சி அரசு மருத்துவமனை, திருச்சி கலையரங்க திருமண மண்டபம், என்.ஐ.டி. ஆகியவற்றில் மொத்தம் 670 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதல்-அமைச்சர் ஆய்வு

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். 

முதல் கட்டமாக அவர் சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு நேற்று காலை மதுரை மாவட்டத்திலும் ஆய்வு செய்த முதல்-அமைச்சர், அங்கிருந்து கார் மூலம் நேற்று பகல் திருச்சி வந்தார். திருச்சி அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்த அவர், மாலை 4.45 மணி அளவில் காரில் புறப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார். 

கொரோனா சிகிச்சை மையம்

அங்கு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தின் 6-வது தளத்தில் 90 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள், 60 கொரோனா தீவிர சிகிச்சை பிரிவுக்கான படுக்கைகள் உள்பட கூடுதலாக 250 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை மையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

ஏற்கனவே திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 914 படுக்கை வசதிகள் இருந்தன. தற்போது கூடுதலாக 250 படுக்கைகள் சேர்த்து மொத்தம் 1,164 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி

அரசு மருத்துவமனையில் ஆய்வை முடித்துவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின், மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள கலையரங்க திருமண மண்டபத்துக்கு சென்றார்.

அங்கு 100 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார். பின்னர், துவாக்குடியில் உள்ள திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி (என்.ஐ.டி.) வளாகத்துக்கு மு.க.ஸ்டாலின் சென்றார்.
திருச்சி என்.ஐ.டி.
அங்கு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் 320 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 50 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. 

அந்த மையத்தை திறந்து வைக்க வந்த மு.க.ஸ்டாலினுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. மேலும் சானிடைசர் மூலம் கைகளின் உள், வெளிப்புறம் நன்றாக தடவிக்கொண்டார்.

கபசுர குடிநீர் அருந்தினார்

அங்கு வைக்கப்பட்டிருந்த சித்த மருத்துவ மூலிகை கண்காட்சியை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், கபசுரகுடிநீர் அருந்தினார். பின்னர், கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து அவர் ஆய்வு செய்தார். பின்னர், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து டாக்டர்களுடன் கலந்தாலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ், டீன் வனிதா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story