தொழிலாளர் வைப்புநிதியுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்ட பணப்பலன் ரூ.7 லட்சமாக உயர்வு-அதிகாரி தகவல்
தொழிலாளர் வைப்புநிதியுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்ட பணப்பலன் ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக வருங்கால வைப்புநிதி உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சேலம்:
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் சேலம் கிளை வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் நவீன் இம்மானுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் வைப்புநிதியுடன் இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் 22(3)-வது பிரிவின் கீழ் அளிக்கக்கூடிய அதிகபட்ச உத்தரவாத பயன், முந்தைய அதிகபட்ச பயனான ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அளிக்கக்கூடிய குறைந்தபட்ச உத்தரவாத பயன் 15.2.2020-ல் இருந்து ரூ.2½ லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இறந்த தொழிலாளர் நிதியில் உறுப்பினராக இருந்திருந்தாலோ அல்லது வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) மற்றும் எம்.பி. சட்டத்தின் பிரிவு 17-ன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலோ மற்றும் அத்தகைய நபர், இறந்த மாதத்திற்கு முந்தைய தொடர்ச்சியான 12 மாதங்களில் வேலைவாய்ப்பில் இருந்தால் அந்த காலக்கட்டத்தில் நிறுவன மாற்றத்தை பொருட்படுத்தாமல் பயனாளிகளுக்கு தொழிலாளர் வைப்புநிதியுடன் இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தில் 22(3)-வது பிரிவின் கீழ் அளிக்கப்படும் பயன் நீட்டிக்கப்படும். இந்த விதிமுறைகள் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதியில் இருந்து (அரசிதழில் வெளியிடப்பட்ட தேதி) 3 ஆண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும். எனவே அனைத்து தொழிலாளர்களும் உடனடியாக https://unifiedportalmem.epfindia.gov.in/memberinterface/-ல் மின் நியமனம் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் நேரடி தொடர்பின்றி நன்மைகளை இணையம் வழியாக பெற உதவுகிறது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story