அனைத்து சந்தைகளும் மூடப்பட்டதால் சேலத்தில் காய்கறி விலை இருமடங்கு உயர்வு கீரை வகைகளுக்கு தட்டுப்பாடு
சேலத்தில் அனைத்து சந்தைகளும் மூடப்பட்டதால், காய்கறி விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக கீரை வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
சேலம்:
சேலத்தில் அனைத்து சந்தைகளும் மூடப்பட்டதால், காய்கறி விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக கீரை வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
கட்டுப்பாடுகள்
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் மாநகரில் உள்ள 4 உழவர்சந்தைகளும், பழைய பஸ் நிலையம், ஜவகர் மில் திடல் பகுதிகளில் செயல்பட்டு வந்த தற்காலிக சந்தைகளும் மூடப்பட்டுள்ளன.
இதற்கு பதிலாக 4 மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளிலும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்திய நாளில் இருந்து மளிகை மற்றும் சில்லரை வியாபாரிகள் தினமும் அதிகாலை பழைய பஸ் நிலையத்துக்கு வந்து, தங்களது கடைகளுக்கு தேவையான காய்கறிகளை மொத்த வியாபாரிகளிடம் வாங்கி செல்வார்கள். ஆனால் நேற்று அதிகாலை மளிகை கடைக்காரர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
விலை அதிகரிப்பு
சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு நேற்று வெளியூர்களில் இருந்து குறைந்த அளவிலான காய்கறிகளே வந்தது. அதுவும் தக்காளியை தவிர மற்ற அனைத்து வகையான காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்தது. இதனை கேட்டு மளிகை கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த வாரம் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.20 முதல் 25 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட அவரைக்காய் ரூ.60-க்கும், ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் ரூ.120-க்கும், ரூ.30-க்கு விற்ற ஒரு கிலோ இஞ்சி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கும், வெண்டைக்காய் ரூ.40-க்கும், கொத்தமல்லி கட்டு ரூ.35-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கீரைக்கு தட்டுப்பாடு
இந்த விலைக்கு மளிகைக் கடைக்காரர்கள் காய்கறிகளை வாங்கினால் அதை விட கூடுதல் விலைக்கு பொதுமக்களிடம் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதைப்போல் விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் அரைக்கீரை, தண்டு கீரை, மணத்தக்காளி கீரை உள்ளிட்ட கீரை வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.
அஸ்தம்பட்டி சூரமங்கலம், அம்மாபேட்டை, தாதகாப்பட்டி ஆகிய பகுதிகளில் நடமாடும் வாகனங்களிலும் நேற்று கீரைகளை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story