சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதி
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருப்பு பூஞ்சை நோய்
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கொரோனாவுக்கு தினமும் ஏராளமானவர்கள் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் கருப்பு பூஞ்சை என்ற நோய் மக்களை தாக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் மேலும் அச்சம் அடைந்து வருகின்றனர்.
மேட்டூர், ஓமலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று மீண்ட நிலையில் தற்போது அவர்கள் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனி வார்டில் சிகிச்சை
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மேலும் 3 பேர் இந்த நோய் அறிகுறியுடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் தான் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என்று டாக்டர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை.
இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறும் போது, ‘கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் 5 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பொது மருத்துவம் மற்றும் கண் மற்றும் காதுத்துறைகளை சேர்ந்த டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இதற்காக தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களுக்கும், மூச்சு திணறல் உள்ளவர்களுக்கும் கருப்பு பூஞ்சை என்ற நோய் வர வாய்ப்புள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் உள்ளன. மேலும் கூடுதல் மருந்துகளை கேட்டு உள்ளோம்’ என்றார்.
Related Tags :
Next Story