தேனியில் காய்கறி கமிஷன் கடைகள் தற்காலிக இடமாற்றம்
தேனியில் காய்கறி கமிஷன் கடைகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேனி:
தேனி மேற்கு சந்தையில் காய்கறி மற்றும் பழங்களுக்கான கமிஷன் கடைகள் உள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இங்கு தங்களின் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இங்கு வந்து காய்கறி, பழங்களை ஏலம் எடுத்து செல்வார்கள். கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த கமிஷன் கடைகள் வீரபாண்டிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் மீண்டும் பழைய இடத்திலேயே கமிஷன் கடைகள் செயல்பட்டன.
இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கமிஷன் கடைகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், கமிஷன் கடைகளின் உரிமையாளர்கள், கடந்த ஆண்டு போல் வீரபாண்டிக்கு இடமாற்றம் செய்யாமல் தேனி பகுதியிலேயே இடம் தேர்வு செய்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடமும், நகராட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிரே காலியிடத்தில் தற்காலிகமாக கமிஷன் கடைகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று அங்கு 30 கமிஷன் கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.
இடமாற்றம் செய்யப்பட்ட கடை வளாகத்தை தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து அங்கு விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து ஏலம் விட தொடங்கினர். வியாபாரிகளும் அங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
Related Tags :
Next Story