மும்பை அருகே கப்பல் மூழ்கி 86 பேர் மாயம் இதுவரை 51 பேரின் உடல்கள் மீட்பு பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு
மும்பை அருகே நடுக்கடலில் கப்பல் மூழ்கிய விபத்தில் இதுவரை 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் பலியானவர்களின் குடும்பத்துக்கு கப்பல் நிறுவனம் நிவாரணம் அறிவித்து உள்ளது.
மும்பை,
அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் கடந்த திங்கட்கிழமை இரவு கரையை கடந்தது. முன்னதாக இந்த புயல் மும்பை கடல் பகுதியாக நகர்ந்த போது, மும்பையில் இருந்து 70 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் கிணறு அருகே எண்ணெய் துரப்பண பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த பி-305 என்ற கப்பலின் நங்கூரம் இழந்தது.
கடல் கடுமையாக கொந்தளித்ததால், இந்த கப்பல் மற்றும் நங்கூர படகு மூழ்கியது. இந்த விபத்துகளில் 274 பேர் சிக்கி நடுக்கடலில் தத்தளித்தனர். அவர்களில் 188 பேர் மீட்கப்பட்டனர்.
மற்ற 86 பேரை மீட்கும் பணியில் கடற்படை, கடலோர காவல் படை, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் இரவு பகலாக ஈடுபட்டது. இதில் நேற்று முன்தினம் வரை 49 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று 5-வது நாளாக நடந்த தேடுதல் வேட்டையில் மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்தது. மற்ற 35 பேரை தேடும் பணி தொடந்து நடந்து வருகிறது.
எண்ணெய் துரப்பண பணியை ஓ.என்.ஜி.சி.க்காக ஆப்கான்ஸ் என்ற நிறுவனம் செய்து வந்தது. எனவே அந்த நிறுவனம் கப்பல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஊழியர்களின் பணி தகுதிக்கு ஏற்ப தலா ரூ.35 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story