வெடிகுண்டு கார் வழக்கில் கைதான உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாஸ் காசி பணி நீக்கம்


வெடிகுண்டு கார் வழக்கில் கைதான உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாஸ் காசி பணி நீக்கம்
x
தினத்தந்தி 22 May 2021 7:50 PM IST (Updated: 22 May 2021 7:50 PM IST)
t-max-icont-min-icon

வெடிகுண்டு கார் வழக்கில் கைது செய்யப்பட்ட சச்சின் வாசேவுடன் பணியாற்றிய உதவி போலீஸ் இனஸ்பெக்டர் ரியாஸ் காசி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மும்பை, 

இந்திய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மும்பை 27 மாடி ‘அன்டிலா' குடியிருப்பு அருகே கடந்த பிப்ரவரி 25-ந் தேதி வெடிகுண்டுகள் நிரப்பிய கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த காரின் உரிமையாளரான தானேயை சேர்ந்த வியாபாரி ஹிரன் மன்சுக் மார்ச் 5-ந் தேதி மும்ரா கழிமுக கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார்.

இந்த வழக்கில் மார்ச் 13-ந் தேதி மும்பை குற்றப்புலனாய்வு பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில் அவருடன் பணியாற்றிய உதவி இன்ஸ்பெக்டர் ரியாஸ் காசி, இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் விநாயக் ஷிண்டே, கிரிக்கெட் சூதாட்டக்காரர் நரேஷ் கோர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்களையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து இருந்தனர்.

இவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாஸ் காசி நேற்று பணியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்.

மும்பை போலீஸ் கமிஷனர் இந்த தகவலை வெளியிட்டார்.

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என வர்ணிக்கப்படும் சச்சின் வாசேவுடன், மும்பை போலீசின் குற்ற புலனாய்வு பிரிவில் பணிபுரிந்தவர் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாஸ் காசி ஆவார். சச்சின் வாசே சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story