தேனி மாவட்டத்தில் 12 நாட்களுக்கு பிறகு பஸ்கள் ஓடின குறைவாக இயக்கியதால் நீண்ட நேரம் பயணிகள் காத்திருப்பு


தேனி மாவட்டத்தில் 12 நாட்களுக்கு பிறகு பஸ்கள் ஓடின குறைவாக இயக்கியதால் நீண்ட நேரம் பயணிகள் காத்திருப்பு
x
தினத்தந்தி 22 May 2021 8:37 PM IST (Updated: 22 May 2021 8:37 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் 12 நாட்களுக்கு பிறகு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

தேனி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 10-ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், 9-ந்தேதி இரவில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காய்கறி, மளிகை கடைகள், மருந்து கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராததால் தமிழக அரசு நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்துக்கு எவ்வித தளர்வுமின்றி முழுமையான ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டது. இந்த ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, மக்களின் நலன் கருதி நேற்று பிற்பகலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணி வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கவும், அனைத்து கடைகளையும் திறக்கவும் அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் தேனியில் அனைத்து வகையான கடைகளும் திறக்கப்பட்டன.
பஸ்கள் இயக்கம்
அதுபோல் நேற்று மாலையில் இருந்து தேனியில் இருந்து மாவட்டத்துக்குள்ளும், திண்டுக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. 12 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ் நிலையத்தில் பயணிகள் குவிய தொடங்கினர். இருப்பினும் குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனர்.
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் தேனியில் தங்கி வேலை பார்த்த தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பலரும் நேற்று தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மாவட்டத்தில் சுமார் 20 பஸ்களே இயக்கப்பட்டன. ஆனால், தனியார் பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டு, எந்த ஊருக்கு பயணிகள் அதிகளவில் காத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து அந்த ஊர்களுக்கு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



Next Story