நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்ட பொதுமக்கள்


நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 22 May 2021 8:47 PM IST (Updated: 22 May 2021 8:47 PM IST)
t-max-icont-min-icon

நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்ட பொதுமக்கள்

கோவை

கோவை மாநகராட்சி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கூட்டத்தை தவிர்க்க டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தடுப்பூசி போடும் பணி

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி நடை பெற்று வருகிறது. ஆனால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை உள்ளது. 

கோவையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்னும் தொடங்கப் படாமல் இருக்கிறது.

45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி மையங்களில் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. சில மையங்களில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. 

நீண்ட வரிசையில் காத்திருப்பு

இந்த நிலையில் கோவை வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தடுப்பூசி போடுவதற்காக நேற்று ஏராளமான பொது மக்கள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றனர். அவர்கள் மையத்துக்குள் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

வரிசையில் காத்து நிற்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று சிங்காநல்லூர் போலீசார் அறிவுறுத்தினார்கள்.  அந்த மையத்தில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசி போடப்படுகிறது.


கோவை ராமலிங்கம் பள்ளியில் மாநகராட்சி சார்பில் போடப்பட்ட தடுப்பூசி பணியை ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். 

அப்போது வயதானவர்கள் நின்று கொண்டிருப்பதை கண்ட அவர், தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் அமரும் வகையில் சமூக இடைவெளி விட்டு நாற்காலிகள் போட ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

டோக்கன் வழங்க முடிவு

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது

கோவை மாநகராட்சியில் அரசு கலைக்கல்லூரி, வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ராமலிங்கம் காலனி மாநகராட்சி பள்ளி, மணியக்காரம்பாளை யம் மாநகராட்சி தொடக்க பள்ளி ஆகிய 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இங்கு தடுப்பூசி போடுவதற்காக பொது மக்கள் காலை நேரத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இதனால் ஏற்படும் கூட்டத்தை தவிர்க்க டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில், தடுப்பூசி போட வருபவருக்கு தடுப்பூசி போடப்படும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். 

அந்த நேரத்தில் மட்டும் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதனால் வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தடுப்பூசி போடும் ஆர்வம் பொதுமக்களிடம் அதிகரித்து உள்ளது. எனவே முகாம்களுக்கு வரும் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story