வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
காரைக்கால் அருகே வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
காரைக்கால்,
காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி எதிரில், வாடகை வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் கோட்டுச்சேரி போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டுக்குள் 5 பேர் கொண்ட கும்பல் விற்பனை செய்வதற்காக சாராயத்தை பாட்டில்களில் அடைத்து கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் வரிச்சிக்குடியை சேர்ந்த திருநீலகண்டன் (வயது 26), பக்கிரி (47), கோட்டுச்சேரியை சேர்ந்த பிரதீப் (28), சுரேஷ்கிருஷ்ணா (19) நெடுங்காட்டை சேர்ந்த ரமேஷ் (46) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 77 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சாராயத்தை கொண்டு செல்வதற்காக வைத்திருந்த 4 மோட்டார் சைக்கிள்கள், ரூ.1,500 கைப்பற்றப்பட்டன.
பின்னர் 5 பேரும், மாவட்ட கலால்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கலால்துறையினர், 5 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு சாராயம் கொடுத்ததாக மண்டபத்தூர் சாராயக்கடை உரிமையாளர் கனகராஜ், காசாளர் காளியப்பன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story