தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 12 பேர் பலி


தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 12 பேர் பலி
x
தினத்தந்தி 22 May 2021 9:24 PM IST (Updated: 22 May 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் 12 பேர் நேற்று ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.

தேனி:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு தினமும் உயிரிழப்பு நடக்கிறது. 
நேற்று முன்தினம் வரை தேனி மாவட்டத்தில் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு 289 பேர் பலியாகி இருந்தனர். பலருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
12 பேர் பலி
இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பெண்கள் உள்பட 12 பேர் நேற்று ஒரே நாளில் பலியாகி உள்ளனர். அதன்படி ஆண்டிப்பட்டி மணியகாரன்பட்டியை சேர்ந்த 55 வயது பெண், சின்னமனூரை சேர்ந்த 42 வயது பெண், அனுமந்தன்பட்டியை சேர்ந்த 2 பெண்கள், தேனி கே.ஆர்.ஆர் நகரை சேர்ந்த 57 வயது ஆண், கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த 59 வயது ஆண், டி.ரெங்கநாதபுரத்தை சேர்ந்த 39 வயது ஆண், கு.லட்சுமிபுரத்தை சேர்ந்த 64 வயது முதியவர், போடியை சேர்ந்த 55 வயது ஆண், சின்னமனூர் பகுதியை சேர்ந்த 61 வயது முதியவர், பண்ணைப்புரத்தை சேர்ந்த 72 வயது முதியவர், ஆதிப்பட்டியை சேர்ந்த 46 வயது ஆண் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
701 பேருக்கு தொற்று
இதற்கிடையே தேனி மாவட்டத்தில் நேற்று 701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 431 ஆக உயர்ந்தது. சிகிச்சையில் இருந்து 566 பேர் நேற்று குணமாகினர். பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 541 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 618 படுக்கைகள் உள்ளன. அதில் 610 பேருக்கு செயற்கை ஆக்சிஜன் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) 68 படுக்கை வசதி உள்ளது. அவை அனைத்தும் நிரம்பி விட்டன. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story