ஊரடங்கால் உணவின்றி தவிப்பு: ஆதரவற்றோர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் சமூக அமைப்பினர்
ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர்களுக்கு சமூக அமைப்பினர் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர்.
புதுச்சேரி,
சின்னஞ்சிறிய மாநிலமான புதுவைக்கு சுற்றுலாவுக்காக வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இவர்களை எதிர்பார்த்து நூற்றுக்கணக்கான ஆதரவற்றவர்கள் புதுவையில் உள்ளனர்.
அதாவது சுற்றுலா பயணிகளிடம் பணம், உணவு பெற்று வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தலையில் கொரோனா என்ற கொடிய தொற்று பேரிடியாக விழுந்துள்ளது.
புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருவதில்லை. இதனால் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
இதுபற்றி தெரியவந்த சமூக அமைப்புகள் சில, சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்களுக்கு உணவு வழங்கி, அவர்களின் பசியாற்ற முன்வந்துள்ளன. இதற்காக சமூக அமைப்பினர் ஒரு இடத்தில் மொத்தமாக உணவு தயாரித்து அதனை பொட்டலங்களில் கட்டி வாகனத்தில் எடுத்துக்கொண்டு ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரா்களுக்கு வழங்கி வருகின்றனர்.
மறைமலை அடிகள் சாலை, காந்தி வீதி, மிஷன் வீதி, சின்ன வாய்க்கால் உள்பட முக்கிய சாலைகளில் வசித்துவரும் தெருவோர மக்களுக்கு உணவு வழங்குகின்றனர். அதனை பெற்றுக்கொண்டவர்கள், சமூக அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story