கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தம்
கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
கச்சிராயப்பாளையம்
பாசனத்துக்கு தண்ணீர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 46 அடி ஆகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை மட்டுமே தண்ணீர் சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்ற ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து கடந்த அக்டோபர் 1-ந் தேதி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் பழைய பாசன வாய்க்கால் வழியாக 110 கனஅடியும், புதிய பாசன வாய்க்கால் வழியாக 110 கனஅடியும் என மொத்தம் 220 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
22 அடியாக குறைந்தது
60 நாளைக்கு பின்னர் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அதன்படி பழைய பாசனம் வழியாக 50 கன அடியும், புதிய பாசனம் வழியாக 50 கன அடியும் என மொத்தம் 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வந்தனர்.
இந்த நிலையில் கோடை வெயிலின் காரணமாக ஏற்பட்ட கடும் வறட்சியால் கோமுகி அணையின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்தது. இதனால் 44 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் தற்போது 22 அடியாக குறைந்து விட்டது.
தண்ணீர் நிறுத்தம்
தற்போது பயிர் சாகுபடி முடிந்து அறுவடை காலம் என்பதாலும், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை(நீர்வளம்) அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது தினந்தோறும் பாசன வாய்க்கால் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் வழங்கி வந்தோம். இந்த நிலையில் கோமுகி அணையில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதாலும், வறட்சி காலங்களில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டு்ள்ளது என்றார்.
Related Tags :
Next Story