ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணா மரணம் இன்று மைசூருவில் இறுதிச்சடங்கு நடக்கிறது
மைசூருவில் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணா மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மைசூருவில் நடக்கிறது.
மைசூரு,
மைசூரு டவுன் குவெம்பு நகரில் வசித்து வந்தவர் கிருஷ்ணா. ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த இவர் கர்நாடக சட்டசபையின் சபாநாயகராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரது சொந்த ஊர் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை ஆகும். மேலும் இவர் கே.ஆ.பேட்டை சட்டமன்ற தொகுதியில் தான் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக இவர் உடல்நலக்குறைவால் அவதி அடைந்தார். இதனால் இவர் சிகிச்சைக்காக தமிழ்நாடு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது உடல்நிலை சரியாகவில்லை. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் மைசூரு குவெம்பு நகரில் உள்ள வீட்டுக்கு கொண்டு வந்தனர். மேலும் அவருக்கு வீட்டில் வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் கிருஷ்ணா உயிரிழந்தார். அவரது உடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு முன்னாள் மந்திரிகள் ஜி.டி.தேவேகவுடா, சா.ரா.மகேஷ், எச்.விஸ்வநாத், தன்வீர்சேட், ராமதாஸ் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் அரசியல் தலைவர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணாவின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் இன்று(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, குமாரசாமி உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story