குமரியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 30 பேர் பலி


குமரியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 30 பேர் பலி
x
தினத்தந்தி 22 May 2021 11:09 PM IST (Updated: 22 May 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 30 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். தினசரி பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 30 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். தினசரி பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
கொரோனா பரவல்
குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் வேக, வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் பாதிப்பு கட்டுக்குள் வந்தபடி இல்லை.
ஏனெனில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியே உள்ளது. இந்த நிலையில் சற்று நிம்மதி அளிக்கும் விதமாக நேற்று முன்தினம் பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதாவது ஒரு நாளில் புதிதாக 908 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்து 475 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் பலர் தக்கலை அரசு ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நோய்த்தொற்று குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
30 பேர் பலி
இது ஒருபுறமிருக்க பலி எண்ணிக்கை மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. ஏன் எனில் இதுவரை கொரோனாவுக்கு 28 பேர் பலியானதே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 30 பேரின் உயிரை கொரோனா காவு வாங்கியுள்ளது. இது குமரி மாவட்டத்தில் கொரோனா பலியில் புதிய உச்சம் ஆகும். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 763 ஆக உயர்ந்துள்ளது. தினமும் ஏராளமானோர் பலியாகி வருவதால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் பிணங்களை வைக்க இடம் இல்லை என்று கூறப்படுகிறது.
ஒரே தெருவில் 13 பேருக்கு தொற்று
குமரி மாவட்டத்தில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களில் பெரும்பாலானோர் நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாகர்கோவில் செந்தூரான்நகர் 5-வது தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்த 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அங்கு 2 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட தெருவை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதோடு அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றினர். இதற்காக நுழைவு வாயில் பகுதியில் கம்புகளால் கட்டி மூடப்பட்டது. மேலும் அங்கு நோய் தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் வடிவீஸ்வரம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள 7 வீடுகளில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அந்த தெரு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் அந்த தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story