ஊரடங்கு உத்தரவை மீறி காலை 10 மணிக்கு மேல் கடை திறந்திருந்தவருக்கு அபராதம்; அரசின் தளர்வு உத்தரவால் திரும்ப வழங்கப்படுமா?
ஊரடங்கு உத்தரவை மீறி காலை 10 மணிக்கு மேல் கடை திறந்திருந்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அரசின் தளர்வு உத்தரவால் அபராதத்தொகை திரும்ப வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ராசிபுரம்:
ஊரடங்கு விதிமீறல்
தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கின் போது காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்படலாம் என்றும், அதற்கு மேல் திறந்திருக்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காலை 10 மணிக்கு மேல் திறந்திருக்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று ராசிபுரம் நகராட்சி பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி (பொறுப்பு), இன்ஸ்பெக்டர் செல்வராஜ், நகராட்சி ஆணையாளர் குணசீலன் (பொறுப்பு), துப்புரவு ஆய்வாளர்கள் மணிவண்ணன், லோகநாதன், பாஸ்கரன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அண்ணா சாலையில் ஊரடங்கு உத்தரவை மீறி மதியம் 12 மணி வரை மளிகை கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்த உரிமையாளருக்கு, அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
எதிர்பார்ப்பு
இதனிடையே சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாகவும், இந்த ஊரடங்கின் போது காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்பட தடை விதிக்கப்படுவதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நேற்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறந்து வியாபாரம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு மேல் வந்த அரசின் தளர்வு உத்தரவால், ராசிபுரத்தில் கடை திறந்திருந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்ட மளிகை கடைக்காரருக்கு அபராத தொகை திரும்ப வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு வணிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
‘சீல்’ அகற்றப்பட்டது
இந்தநிலையில் மோகனூர் அருகே உள்ள அணியாபுரம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா, வளையப்பட்டி வருவாய் ஆய்வாளர் பாப்பாத்தி மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மளிகை கடை ஒன்றை காலை 10 மணிக்கு மேல் திறந்து வியாபாரம் செய்தது தெரிந்தது. இதையடுத்து அந்த மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோல் மோகனூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக எலக்ட்ரிக் கடை ஒன்றிற்கும் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
இதனிடையே ஊரடங்கில் தளர்வு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையறிந்த வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட அந்த 2 கடைகளுக்கும் சென்று சீலை அகற்றினர். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு என்.புதுப்பட்டியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 3 பேக்கரிகளுக்கு வைத்திருந்த சீலையும் வருவாய்த்துறையினர் அகற்றினர்.
Related Tags :
Next Story