குமரியில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை
குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால், குழித்துறை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால், குழித்துறை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் மழை கொட்டி தீர்த்தது. இதனால் குமரி மாவட்டத்தில் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது. அது விடிய, விடிய கொட்டி தீர்த்தது.
சாலையில் வெள்ளப்பெருக்கு
இந்த நிலையில் நேற்று காலை நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. முதலில் சாரலாக தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதாவது செம்மாங்குடி ரோடு, அவ்வை சண்முகம் சாலை, கோர்ட்டு ரோடு, கணேசபுரம் ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
பேச்சிப்பாறை அணை நிரம்புகிறது
தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை 647 கனஅடி தண்ணீர் வந்தது. அதே சமயம் அணையில் இருந்து 473 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் முழு கொள்ளளவு 48 அடி என்ற நிலையில் தற்போது நீர்மட்டம் 44 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
இதே போல் பெருஞ்சாணி அணைக்கு 473 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணைக்கு 105 கனஅடி தண்ணீரும், சிற்றார் 2 அணைக்கு 161 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணைக்கு 6 கனஅடி தண்ணீர் வருகிறது.
திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சானல்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் குளங்கள் நிரம்பி வருகிறது.
மார்த்தாண்டம்
மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான குழித்துறை, களியக்காவிளை, மேல்புறம், மஞ்சாலுமூடு, திருவட்டார், ஆற்றூர், இரவிபுதூர்கடை, நட்டாலம், காப்புக்காடு, வெட்டுமணி போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் சிறு, சிறு இடைவெளியுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சப்பாத்து தடுப்பணை மீது ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சப்பாத்து தடுப்பணையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் விளை நிலங்களில் மழை வெள்ளம் புகுவதால் வாழை, காய்கறி போன்ற பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
நித்திரவிளை
நித்திரவிளை அருகே ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால், அந்த பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் சாலையோரம் மணல் மூடைகளை அடுக்கி தற்காலிக பாதை உருவாக்கினர். இந்த பகுதியில் தொடர்ச்சியாக மழைவெள்ளம் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுபோல், தேங்காப்பட்டணம் - கருங்கல் சாலையில் தாழ்வான பகுதியில் வெள்ளம் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
குளச்சல்
குளச்சல் பகுதியில் பெய்த கனமழையால் பாம்பூரி வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளியாகுளம் நிரம்பி காணப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் புல்லன்விளையை சேர்ந்த சுசீலா (வயது 72) என்பவர் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. வீட்டின் மற்றொரு பகுதியில் தூங்கி கொண்டிருந்த சுசீலாவும், அவரது மகன் சுரேசும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். கனமழையால் குளச்சல் நகர பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
52 மி.மீ. பதிவு
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக முள்ளங்கினாவிளை மற்றும் கோழிப்போர்விளை ஆகிய பகுதிகளில் 52 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-
பேச்சிப்பாறை-42.8, பெருஞ்சாணி-30.8, சிற்றார் 1-44.2, சிற்றார் 2-47, களியல்-21, கன்னிமார்-6.4, மைலாடி-23.4, கொட்டாரம்-13.4, குழித்துறை-23, இரணியல்-37, குளச்சல்-24.4, குருந்தன்கோடு-32.6, நாகர்கோவில்-18.4, பூதப்பாண்டி-8.2, சுருளோடு-28.6, ஆரல்வாய்மொழி-20, புத்தன்அணை-31.4, தக்கலை-17, அடையாமடை-21, பாலமோர்-19.4, முக்கடல்-10, மாம்பழத்துறையாறு-27, ஆரல்வாய்மொழி-9.2, ஆனைகிடங்கு-39.4 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
Related Tags :
Next Story