நாளை முதல் தளர்வுகள் அகற்ற முழு ஊரடங்கு: நாமக்கல்லில் மளிகை, காய்கறி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்; பஸ்களும் இயக்கப்பட்டன
தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று நாமக்கல்லில் உள்ள மளிகை, காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக பஸ்களும் இயக்கப்பட்டன.
நாமக்கல்:
ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த காலத்தில் காலை 10 மணி வரை மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டு இருந்தது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாங்கி விட்டு பின்னர் தங்களது வீடுகளில் முடங்கினர்.
இதற்கிடையே நாமக்கல் நகராட்சியில் நாளை (திங்கட்கிழமை) முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்றும், காய்கறி, மளிகை பொருட்களை பொதுமக்களின் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யலாம் என்றும் உதவி கலெக்டர் கோட்டைக்குமார் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அலைமோதிய கூட்டம்
இதனிடையே நேற்று காலை மளிகை, காய்கறி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. சில மளிகை கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டாலும், ஒரு சில கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை.
நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த உழவர்சந்தை மூடப்பட்டதால், சாலையோர காய்கறி கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். மேலும் ஏற்கனவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டு இருந்ததால் இறைச்சி கடைகளிலும் வழக்கத்தை காட்டிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பஸ்கள் இயக்கம்
இதற்கிடையே நேற்று பிற்பகல் 2 மணி அளவில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையாட்டி டாஸ்மாக் கடைகளை தவிர இதர கடைகளை திறக்கவும் அனுமதி அளித்தது. எனவே நேற்று மாலையில் நாமக்கல் நகரில் சுமார் 50 சதவீத கடைகள் திறக்கப்பட்டன. மேலும் இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே வெளியூர்களுக்கு பயணிகள் செல்ல வசதியாக புறநகர் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களை இயக்கலாம் எனவும் அரசு உத்தரவிட்டது. எனவே இரு வாரங்களாக நிறுத்தப்பட்டு இருந்த பஸ்களும் நேற்று மாலை முதல் இயக்கப்பட்டன. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் முதல் கட்டமாக 10 பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் பயணிகள் குறைவான அளவே பயணித்தனர். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story