நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்


நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 22 May 2021 11:23 PM IST (Updated: 22 May 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

கருங்காலிகுப்பம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதாக கூறி விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்பென்னாத்தூர்

கருங்காலிகுப்பம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதாக கூறி விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வியாபாரிகள் பதிவு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த கருங்காலிகுப்பம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல்லை கொண்டுவந்து விற்பனை செய்து வருகிறார்கள். 

இங்கு கொண்டு வரப்படும் நெல்ரகங்கள் பணியாளர்கள் மூலமாக சுத்தப்படுத்தி கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையில், நெல் வியாபாரிகள் வெளியிடத்தில் குறைவான விலைக்கு அதிக அளவில் மூட்டைகளை வாங்கி பல்வேறு விவசாயிகளின் பெயரில் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவந்து விற்பதற்கு பதிவு செய்வதாக கூறப்படுகிறது. 

முற்றுகை போராட்டம்

விவசாயிகளைவிட அதிக அளவில் நெல் மூட்டைகள் கொண்டு வரும் வியாபாரிகளுக்கு  தூற்றும் கூலியாட்கள் முன்னுரிமை வழங்குவதாகவும், இதனால் விவசாயிகள் கூடுதல் நாட்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்படுவதாகவும் கூறி நேற்று காலை விவசாயிகள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த மாதம் ஏப்ரல் 6, 8, 10, 12, 16 போன்ற தேதிகளில் நெல் மூட்டைகள் கொண்டு வந்து பதிவு செய்தோம். 40, 45 நாட்கள்ஆகியும் நாங்கள் கொண்டுவந்த நெல்லை தூற்றாமல் வியாபாரிகளுக்கு முன்னுரிமை தருகின்றனர் என்றனர்.

வியாபாரிகள் வருவதில்லை

இதுகுறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர் அமலநாதனிடம் கேட்டபோது ஒரு நாளைக்கு அதிகபட்சமாக தூற்றப்பட்ட 800 மூட்டை நெல் லோடு ஏற்றப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

இந்த ஆண்டு அதிக விளைச்சல் காரணமாக 2 ஆயிரத்திலிருந்து 2,500 மூட்டைகள் வரை கொண்டு வந்து பதிவு செய்கின்றனர். வியாபாரிகள் வருவதில்லை என அவர் கூறினார்.

Next Story