திருச்செந்தூரில் பாதாள சாக்கடை பணிகளை 5 மாதத்துக்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு


திருச்செந்தூரில் பாதாள சாக்கடை பணிகளை 5 மாதத்துக்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 23 May 2021 12:02 AM IST (Updated: 23 May 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் பாதாள சாக்கடை பணிகளை இன்னும் 5 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகர பஞ்சாயத்தில் கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கிய பாதாள சாக்கடை திட்டப்பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாமல் உள்ளது. இந்த நிலையில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. 

கூட்டத்துக்கு மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் தனப்பிரியா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூர் முக்கிய கோவில் நகரம். இங்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை முந்தைய ஆட்சியில் முழுமையாக செயல்படுத்தாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இத்திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்னும் 5 மாதத்துக்குள் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை நிறைவு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டுள்ளேன். 

4 ஆயிரத்து 170 இணைப்புகள் வழங்க வேண்டிய இடத்தில் இதுவரை 215 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.  எனவே இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க, நகர பஞ்சாயத்து சார்பில் 3 அலுவலர்களும், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் ஒருவரும் இணைந்து பணியாற்றுவார்கள். 
இப்பணிகளை பாதாள சாக்கடை திட்ட ஆலோசனை குழுவினரும் கண்காணிப்பார்கள். 

இணைப்புக்காக பொதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.5 ஆயிரம் மற்றும் இணைப்பு தொட்டி அமைக்க கட்டணம் ரூ.3 ஆயிரத்து 188 ஆகியவற்றை, திட்டம் முழுமையாக செயல்படுத்தி 6 மாதத்திற்கு பின் பொதுமக்கள் மாதம் ரூ.500 வீதம் தவணையாக கட்டினால் போதும். மேலும் பாதாள சாக்கடை திட்டத்தில் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து அதனை இத்திட்டத்திற்காக கல்லாமொழியில் உள்ள 83 ஏக்கர் நிலத்தில் பூஞ்செடிகள் மற்றும் கால்நடை தீவனங்கள் வளர்த்து பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், நகர பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் ஆவுடைபாண்டி, சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் லதா செயின்நவீன், உதவி பொறியாளர்கள் அர்ஜூன், வான்மதி, பாதாள சாக்கடை திட்ட ஆலோசனைக்குழு தலைவர் வக்கீல் சந்திரசேகரன், தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் கார்க்கி, யாதவ வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி, யாதவ சமுதாயம் சார்பில் வீரக்கண், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், எஸ்.ஏ.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story