பெரும்பாலான கடைகள் திறப்பு; சாலைகளில் நடமாடிய பொதுமக்கள்


பெரும்பாலான கடைகள் திறப்பு; சாலைகளில் நடமாடிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 23 May 2021 12:04 AM IST (Updated: 23 May 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

அரசு உத்தரவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

காரைக்குடி,

அரசு உத்தரவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

கொரோனா பரவல்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு நாளை 24-ந்தேதி வரை அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதில் முதல் கட்டமாக மதியம் 12 மணி வரை மட்டும் அத்தியவாசிய பொருட்கள் கடைகள் திறக்கப்பட்டன. ெபாதுமக்கள் நடமாட்டம் அதிகரித்ததை தொடர்ந்து காலை 10 மணி வரை மட்டும் கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டது.
 மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் காலை 10 மணி வரை கடைகள் திறக்கப்பட்ட நிலையில் அந்த நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

தளர்வு இல்லா ஊரடங்கு

இதை தொடர்ந்து நாளை முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதையொட்டி நேற்றும், இன்றும் அனைத்து கடைகளும் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அரசின் அறிவிப்பு வெளியான உடனே வியாபாரிகள் அவசர, அவசரமாக தங்கள் கடைகளை திறந்தனர். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காரைக்குடி, திருப்பத்தூர், இளையான்குடி, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைகள், நகைகடைகள், டீக்கடைகள், ஜவுளிக்கடைகள், செருப்பு கடைகள், சலூன் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.
மாவட்டம் முழுவதும் 60 சதவீத கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. காரைக்குடியில் நேற்று திறக்கப்பட்ட இறைச்சி, மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
வெறிச்சோடிய சாலைகளில் வாகனங்கள் அதிக அளவில் செல்வதை பார்க்க முடிந்தது.
காளையார்கோவில்
காளையார்கோவிலில் அனைத்து கடைகளும் மாலை 4 மணி முதல் திறக்கப்பட்டிருந்தன. மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள், அழகு நிலையங்கள், பர்னிச்சர் கடைகள், ஜவுளி கடைகள், பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளையும் உரிமையாளர்கள் திறந்து வியாபாரம் செய்தனர். இதேபோல் பஸ்களை அரசு இயக்கியது. காளையார்கோவிலிலிருந்து தொண்டி வரை செல்லும் பஸ் நேற்று மாலை ஒரே ஒரு பயணியுடன் மட்டுமே புறப்பட்டுச் சென்றது. சிவகங்கை மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருக்கும்.

Next Story