சமூக வலைத்தளத்தில் பரப்பப்படும் தவறான தகவலால் அச்சத்தில் தவிக்கும் முதியவர்கள்


சமூக வலைத்தளத்தில் பரப்பப்படும் தவறான தகவலால் அச்சத்தில் தவிக்கும் முதியவர்கள்
x
தினத்தந்தி 23 May 2021 12:13 AM IST (Updated: 23 May 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா கோரத்தாண்டவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பரப்பப்படும் தவறான தகவல்களால் அச்சத்தின் பிடியில் முதியவர்கள் சிக்கித்தவிக்கிறார்கள். இளைஞர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்சி,
கொரோனா கோரத்தாண்டவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பரப்பப்படும் தவறான தகவல்களால் அச்சத்தின் பிடியில் முதியவர்கள் சிக்கித்தவிக்கிறார்கள். இளைஞர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா தாக்கம்

உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா 2-வது அலை தமிழகத்திலும் உச்ச கட்டத்தை எட்டி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையிலும், தனிமைமுகாம்களிலும் சிகிச்சைக்காக தஞ்சம் அடைகிறார்கள். வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்காக மருத்துவர்களும், செவிலியர்களும் தீவிரமான களப்பணி ஆற்றி வருகிறார்கள்.

கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். வீடுகளில் தனித்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு விஷயங்கள் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பெரும்பாலானவர்கள் இதை முறையாக கடைப்பிடிக்காததால் தான் கொரோனா வைரசின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தனிமையில் இருக்கும் முதியவர்கள்

இது ஒருபுறமிருக்க, பெற்ற பிள்ளைகளை வெளிநாட்டிலோ, வெளியூரிலோ வேலைக்கு அனுப்பிவிட்டு வீடுகளில் தனிமையில் இருக்கும் முதியவர்களின் நிலை இன்றைய கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற, தவறான தகவல்களால் தனிமையில் இருக்கும் முதியவர்கள் ஒருவித மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

கருப்பு பூஞ்சைத் தொற்று, வெள்ளை பூஞ்சை தொற்று என புதிது, புதிதாக நோய்களின் தீவிரம் குறித்தும், அதுபற்றிய நிச்சயமற்ற தகவல்களையும் சமூக வலைத்தளத்தில் கண்டு முதியவர்கள் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனக்குமுறலை வெளியே சொல்ல முடியாமலும் உள்ளுக்குள்ளேயே புழுங்கி கொண்டு காலத்தை நகர்த்தி வருகிறார்கள்.

ஊரடங்கு நாட்களில் வேலை இல்லாத காரணத்தால் பெரும்பாலான இளைஞர்கள் வாட்ஸ்-அப்களிலும், பேஸ்புக்குகளிலும் வரும் தகவல்களை அடுத்தகணமே மற்றவருக்கு பரப்புவதில் காட்டும் வேகத்தை, அந்த தகவல் உண்மைதானா? என பரிசோதிப்பதில் காட்டுவதில்லை. பெரும்பாலான இளைஞர்கள் கையில் இருக்கும் செல்போன்களை வைத்துக்கொண்டு புதிய, புதிய தகவல்களை பரப்பி வருவதை வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்களின் பொறுப்பு

இன்றைய கொரோனா காலகட்டத்தில் அன்றாட பிழைப்புக்கே பலர் அல்லல்பட்டு வருகிறார்கள். ஆனால் பொழுதுபோக்க வேறு வழி கிடைக்காமல் கொரோனா பற்றி இளைஞர்களால் பரப்பப்படும் உறுதியற்ற தகவல்கள் சமூகத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதற்கு மாறாக, வீடுகளில் தனிமையில் வசிக்கும் முதியவர்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணுகிறது.

கொரோனா பெருந்தொற்றுகாலத்தில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் எப்படியாவது மக்களை காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் களப்பணியாற்றி கொரோனாவின் கோரப்பசிக்கு பல மருத்துவர்களும், செவிலியர்களும், காவல்துறையினரும் மாண்டு போயிருக்கிறார்கள். ஒட்டுமொத்த மனிதநேயமும் தலைதூக்க வேண்டிய தருணம் இது.

சமூக அக்கறை

சமூக அக்கறை என்பது சமூக வலைத்தளங்களிலும் வெளிப்பட வேண்டும். சுவாரசிய தகவல்களை பரப்புவதாக நினைத்துக்கொண்டு, ஊர்ஜிதமற்ற தகவல்களை இளைஞர்கள் பரப்புவதால் எதையும் சாதித்துவிட முடியாது.
மழை வெள்ள காலங்களில் கூட சமூக தொண்டுள்ளம் கொண்ட இளைஞர்கள் பலர் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாதவர்களை காப்பாற்றி அழைத்து வந்து பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தார்கள். ஆனால் இந்த கொரோனா தேற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்கு உடனே பரவி விடும் என்பதால் அத்தகைய உதவியும் கூட செய்யமுடியாத நிலை உள்ளது.

நம்பிக்கைகளை விதைக்க...

ஆகவே சமூக வலைத்தளங்களில் தேவையற்ற தகவல்களை பரப்புவது தவிர்த்து, நோய்தொற்று காலத்தில் மற்றவர்களுக்கு உதவக்கூடிய நல்ல தகவல்களை பரப்புவதும், தைரியத்தை ஏற்படுத்தக்கூடிய நம்பிக்கைகளை விதைப்பதும், இத்தகைய பேரிடர் காலத்தில் செய்யக்கூடிய மிகப்பெரிய சமூக தொண்டாகும். இதனை இளைஞர்கள் உணர்ந்து ஆக்கப்பூர்வமான தகவல்களை பரிமாறி மன உளைச்சலில் சிக்கி தவிப்பவர்களை மீட்டெடுக்க பாலமாக அமைய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story