38 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி
திருச்சி மாவட்டத்தில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்த 38 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி வந்துள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்த 38 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி வந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதியில் இருந்து தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் முன்கள பணியாளர்கள், டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. இதன் பின்னர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி கொண்டுவரப்பட்டது. கொரோனா தடுப்பூசி போட வரும்படி பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அழைப்பு விடுத்தும் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
ஏமாற்றம்
தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதில் இருந்து தடுப்பூசி செலுத்த வருகிறவர்களின் எண்ணிக்கையும் மாவட்டத்தில் அதிகரித்தது. இதனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் காரணமாக முதல் டோஸ் செலுத்திய வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்பட்டு செலுத்தப்படுகிறது. பொதுமக்கள் பலரும் பல இடங்களில் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
38 ஆயிரம் டோஸ்
இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கடந்த 20-ந்தேதி திருப்பூரில் தொடங்கிவைத்தார். இதனால் இந்த வயதுடையவர்களுக்கு செலுத்துவதற்காக முதற்கட்டமாக மாவட்டத்திற்கு கோவேக்சின் 5 ஆயிரத்து 700 டோசும், கோவிஷீல்டு 32 ஆயிரத்து 500 டோஸ் என மொத்தம் 38 ஆயிரத்து 200 டோஸ் வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி போட வந்தனர். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் எங்களுக்கு உத்தரவு வரவில்லை என்றனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
அரசு வழிகாட்டுதல்
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ராம்கணேஷ் கூறியதாவது:-
திருச்சி மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இருப்பினும் இன்னும் இந்த வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த அரசு வழிகாட்டுதல்கள், ஆணைகள் வரவில்லை. இந்த ஆணைகளில் உள்ள அறிவுரையின்படி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தப்படும்.
நிறுத்திவைப்பு
கடந்த சில வாரங்களுக்கு முன்பு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மீண்டும் அதே முறை பின்பற்றப்படுகிறதா? என்பது தெரியவில்லை.
இதனால் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதல் வந்தவுடன் அது தொடர்பாக தடுப்பூசி செலுத்தப்படும். இதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினர்.
Related Tags :
Next Story